

புதுடெல்லி
டெல்லியில் ராம்லீலா விழாவில், கரப்பான்பூச்சி பொம்மை எரிப்பில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று விழா அமைப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
டெல்லி பீதாம்புராவில் இன்று ராம்லீலா விழா நடைபெறும். தீமையை நன்மை வெற்றி கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் எரிக்கப்படும்.
இந்த சூழலில், ராவணன் உள்ளிட்ட உருவபொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையையும் எரிக்க ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி முடிவு செய்துள்ளது. தூய்மை இந்தியா விழிப்புணர்வை ஏற்படுத்தவே அசுத்தத்தின் அடையாளமான கரப்பான் எரிக்கப்படுவதாக விழா அமைப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதன்படி, ராவணனின் சேனையில் அசுரர்களில் ஒன்றாக கரப்பான்பூச்சியும் உருவகப்படுத்தப்படும். தீமையை, நன்மையானது வெற்றி கொள்ளும் செய்தியை வலியுறுத்தும் வகையில் ஒரு மரபாக, இந்த உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொள்வார்கள்.
தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி திட்டத்தின் கீழ் கழிவுப்பொருள் மற்றும் அழுக்கு போன்றவற்றை நீக்குவதற்கான அடையாளமாக அவை எரிக்கப்படும். இந்த அமைப்பு இதற்கு முன்பு, நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோரை பிரதிபலிக்கும் வகையிலான உருவபொம்மைகளை எரித்து உள்ளது.