

ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல். இவரது தந்தை நந்த்குமார் பாகல். இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை மக்கள் தங்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று அவதூறாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் கடவுள் ராமர் குறித்தும் இழிவாக பேசியதாக தெரிகிறது.
இது தொடர்பாக சர்வ பிராமின் சமாஜ் என்ற அமைப்பின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில், நந்த்குமார் பாகலின் அவதூறு பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நந்த்குமார் பாகல் மீது நேற்று முன்தினம் இரவு ராய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனது தந்தை நந்த்குமார் பாகல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல் மந்திரி பூபேஷ் பாகல் அதில் கூறியிருப்பதாவது; - எனது தந்தையின் கருத்து ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளது.
அவரது கருத்து என்னையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனது தந்தைக்கும் எனக்கும் சித்தாந்த வேறுபாடுகள் உண்டு. எங்களின் அரசியல் சிந்தனைகளும் நம்பிக்கைகளும் வெவ்வேறானவை. மகனாக அவர் மீது எனக்கு மரியாதை உண்டும். அதேவேளையில், பொது உத்தரவுக்கு குந்தகம் விளைக்கும் இதுபோன்ற தவறுகளை முதல் மந்திரி என்ற அடிப்படையில் மன்னிக்க மாட்டேன் என்றார்.