திருமணத்திற்கு மறுத்த காதலியை சுட்டுக்கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய கிருஷ்ணாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருமணத்திற்கு மறுத்த காதலியை சுட்டுக்கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
Published on

லக்னோ,

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா (வயது 26). இவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அந்த தொழிற்சாலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த சோனு (வயது 25) என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர்.

இதனிடையே, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சோனுவிடம் கிருஷ்ணா அடிக்கடி கூறியுள்ளார். திருமணத்திற்கு சோனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சோனு தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு கிருஷ்ணா நேற்று சென்றுள்ளார். அங்கு வைத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கிருஷ்ணா மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள சோனு மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா தான் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் சோனுவை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சோனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சோனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிய கிருஷ்ணாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com