

லக்னோ,
நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா செக்டார்-122 பகுதியைச் சேர்ந்தவர் சுசரிதா சாஹா (வயது27) . இவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்விந்தர் சௌஹான் என்பவரை கடந்த ஏப்ரல் 30-ந்தேதி திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, ஹர்விந்தர் நொய்டாவில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
மாமியார் வீட்டிலிருந்தபடியே கணவர் ஹர்விந்தர், சுசரிதாவைத் தேவையில்லாத காரணத்திற்காக தினமும் அடித்துத் துன்புறுத்தி வந்தார்.
இதற்கிடையில், புதுமணத் தம்பதியர் கடந்த மே 4-ம் தேதி தேனிலவுக்காக சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளுக்குச் சென்றனர். அங்கு மே 9-ம் தேதி தங்கியிருந்த ஹோட்டலில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ஹர்விந்தர், சுசரிதாவை ஹோட்டல் மாடிப் படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரின் தலை, முதுகு மற்றும் முழங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மனைவியை மிரட்டியுள்ளார்.
தேனிலவு முடிந்து நொய்டா திரும்பியதும், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்போவதாக சுசரிதா கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கணவர், சுசரிதாவின் செல்போனைப் பறித்துத் தரையில் வீசி உடைத்துள்ளார். மேலும் அவரது முகத்தில் குத்தி, வயிற்றில் உதைத்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்து தப்பித்து டெல்லியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
காயமடைந்த சுசரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து நொய்டா செக்டார்-113 காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கணவர் ஹர்விந்தர் சௌஹான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.