புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு

முதல்-மந்திரி ரங்கசாமி, மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது. அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 10, அ.தி.மு.க. 2, லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

இதேபோல், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி தொடர்கிறது. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில், காங்கிரஸ் 16, தி.மு.க. 12, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளிலும், நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. மேலும், பா.ம.க. டாக்டர் ராமதாஸ் அணியும், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியுடன் 30 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான ரங்கசாமி, மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பா.ஜ.க. சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட நமச்சிவாயம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு முடிந்தாலும், தொகுதிகள் அடையாளம் காணப்படாததால், 30 தொகுதிகளுக்குமே இரு கட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதிகள் முடிவானதும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வார்கள்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசிநாள் 26-ந் தேதி ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com