

எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரம்
மராட்டிய மேல்-சபைக்கு கவர்னரின் ஒதுக்கீட்டின் கீழ் 12 நியமன எம்.எல்.சி.க்கள் பதவியிடம் காலியானதை தொடர்ந்து, அந்த நியமனங்களை செய்ய பெயர் பட்டியலை தயாரித்து கடந்த நவம்பர் மாதம் மந்திரி சபையில் ஒப்புதல் அளித்து அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த 10 மாதமாக முடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்.இது தொடர்பாக கவர்னர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
திடீர் சந்திப்பு
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் திடீரென கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அவருடன் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி பாலசாகேப் தோரட் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது, மேலும் தாமதமின்றி எம்.எல்.சி.க்களை உடனடியாக நியமிக்கும்படி அவர்கள் கவர்னரை வலியுறுத்தினர்.இதனால் 12 எம்.எல்.சி.க்களையும் கவர்னர் உடனடியாக நியமிப்பாரா? அல்லது இன்னும் தாமதப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
செயலில் காட்ட வேண்டும்
முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் சந்தித்து பேசியதால் எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரத்தால் கவர்னர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். இந்த சந்திப்பின்போது அனைவரது முகமும் மலர்ச்சியாக தான் இருந்தது. எம்.எல்.சி.க்கள் நியமனத்துக்கு சாதகமாகத்தான் கவர்னர் உள்ளார். ஆனால் அதை அவர் செயலில் காட்ட வேண்டும். கவர்னர் மாளிகைக்கும், அரசுக்கும் இடையே மராட்டியத்தில் எப்போதும் அதிகாரப்போட்டி இருந்ததில்லை. சுமூக உறவு தான் உள்ளது. அரசு பரிந்துரைத்த எம்.எல்.சி.க்களை கவர்னர் விரைவில் நியமிப்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.