அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி

டி.ஜே.ஹள்ளி உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்து உள்ளார்.
அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
Published on

பெங்களூரு:

டி.ஜே.ஹள்ளி உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்து உள்ளார்.

பா.ஜனதாவினர் எதிர்ப்பு

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, உப்பள்ளி, சிவமொக்கா உள்ளிட்ட இடங்களில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் நடந்த வன்முறை சம்பவங்களில் அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கோரி போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான தன்வீர் சேட் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் குறித்து பரிசீலனை நடத்தும்படி உள்துறை முதன்மை செயலாளருக்கும், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கும் மந்திரி பரமேஸ்வர் பரிந்துரை செய்திருந்தார்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களையும், போலீஸ் நிலையத்திற்கு தீவைத்தவர்களையும் பாதுகாக்க காங்கிரஸ் நினைப்பதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி இருந்தனர். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

துணை குழுவினர் ஆலோசனை

எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு சம்பவங்களால் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி கடிதம் எழுதுவது வழக்கம். தன்வீர் சேட் எம்.எல்.ஏ. எழுதி இருந்த கடிதத்தை நான் பார்க்கவில்லை. வழக்கமாக எனது அலுவலகத்திற்கு வரும் கடிதங்களை உள்துறை மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுப்பி வைப்பது வாடிக்கை. அதுபோல், தான் தன்வீர் சேட் விவகாரத்திலும் நடந்துள்ளது.

ஒரு எம்.எல்.ஏ. வழக்கை வாபஸ் பெறும்படி கடிதம் எழுதியதும், வழக்கை வாபஸ் பெற்று விட முடியாது. அதற்கான விதிமுறைகள் இருக்கிறது. முதலில் வழக்குகளை வாபஸ் பெறுவது பற்றி மந்திரிசபை துணை குழு முன்பாக கோரிக்கை வைக்க வேண்டும். பின்னர் மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் அதுபற்றி ஆலோசனை நடத்த வேண்டும்.

சட்ட நிபுணர்களுடன் கருத்து

அதன்படி, டி.ஜே.ஹள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறையில் அப்பாவிகள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெறுவதால் உண்டாகும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அப்போது உண்மை தன்மையை ஆராய்ந்தும், சட்ட நிபுணர்களுடன் கருத்து கேட்டும் நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதாவினர் சாதாரண விஷயத்தை கூட அரசியல் ஆக்கி விடுகின்றனர்.

இந்த விவகாரத்திலும் பா.ஜனதாவினர் அரசியல் சாயம் பூச நினைப்பது ஏன்?. உடுப்பியில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் பிடித்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற விவகாரங்களில் பா.ஜனதாவினர் அரசியல் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com