கேரளாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - 5 தொகுதி இடைத்தேர்தல் பாதிப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலும் பாதிக்கப்பட்டது.
கேரளாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - 5 தொகுதி இடைத்தேர்தல் பாதிப்பு
Published on

கொச்சி,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்த மழை தொடங்கி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் காலையில் இருந்தே பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த மழை நேற்றும் நீடித்ததால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என பல கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது.

இந்த தொடர் மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகள் வெளியே தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதைப்போல ரெயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் பஸ், ரெயில் போக்குவரத்து நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டது.

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம், எர்ணாகுளம் பிரிவுகளில் பல ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டும், சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எர்ணாகுளம் தெற்கு ரெயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

கனமழையால் மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மாநிலத்தில் வருகிற 24-ந்தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும் எனவும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கேரளாவில் மஞ்சேஸ்வரம், எர்ணாகுளம், கொன்னி, வட்டியூர்காவு, அரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் பலத்த மழையால் வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

மேலும் சில இடங்களில் வாக்குச்சாவடிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. கொச்சியில் வெள்ளம் சூழ்ந்த 10 வாக்குச்சாவடிகள் தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு மாற்றியமைக்கப்பட்டன.

இவ்வாறு மழை, வெள்ளம் காரணமாக இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. எனினும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com