நான் நக்சலைட்டு ஆதரவாளரா..? - துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பரபரப்பு பேட்டி

மாவோயிஸ்டு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை உள்துறை மந்திரி அமித்ஷா படிக்க வேண்டும் என்று சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.
நான் நக்சலைட்டு ஆதரவாளரா..? - துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி பரபரப்பு பேட்டி
Published on

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. இந்த நிலையில் சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். கேரளாவின் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சுதர்சன் ரெட்டி நச்சல் பயங்கரவாதத்துக்கு உதவியவர். சல்வா ஜுடும் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020-ம் ஆண்டே முடிவுக்கு வந்திருக்கும். நக்சல் சித்தந்தத்தால் உந்தப்பட்டு இந்த தீர்ப்பை வழங்கினார் என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் சென்று இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வரும் சுதர்சன் ரெட்டி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஒரு நீதிபதியாக அரசியல்சாசனத்தை பாதுகாத்தேன். எனவே இந்த பயணம் எனக்கு புதிது அல்ல. துணை ஜனாதிபதியாக நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவேன். தற்போது அது அச்சுறுத்தலில் இருக்கிறது.

துணை ஜனாதிபதி போன்ற அரசியல்சாசன உயர் பதவிகளை நிரப்புவதற்கு ஒருமித்த கருத்து இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், தற்போதைய அரசியல் அமைப்பு மாறிவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் போட்டி தவிர்க்க முடியாதது.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆனால் நான் அந்த சித்தாந்தத்தை சாராதவன். அதில் இருந்து வெகுதூரம் விலகி இருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு ஜனநாயகவாதி. துணை ஜனாதிபதி தேர்தலில் தெற்குக்கு எதிராக தெற்கு என்ற விவாதத்தை தவிர்க்க வேண்டும். நானும், சி.பி.ராதாகிருஷ்ணனும் இந்த நாட்டின் குடிமக்கள் மட்டுமே.

மாவோயிஸ்டு விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு 40 பக்கங்களை கொண்டது. அதை உள்துறை மந்திரி அமித்ஷா படிக்க வேண்டும். அவர் படித்திருந்தால் நான் நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என்று கூறியிருக்கமாட்டார். மேலும் அந்த தீர்ப்பைதான் நான் எழுதினேன். ஆனால் அந்த தீர்ப்பு என்னுடையது அல்ல. சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. எனவே இதை விட்டுவிடுவோம். விவாதத்தில் கண்ணியம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com