‘தொழில் அதிபர்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்’ பிரதமர் மோடி பேச்சு

உத்தரபிரதேசத்தில் ரூ.60.228 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசுகையில், ‘தொழில் அதிபர்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்’ என கூறினார். #PMModi
‘தொழில் அதிபர்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்’ பிரதமர் மோடி பேச்சு
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரியில் மாநில முதலீட்டாளர்கள் மாநாடு நடந்த போது ரூ.4.28 லட்சம் கோடி அளவிலான திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் ரூ.60 ஆயிரத்து 228 கோடிக்கான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டது. லக்னோவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு முதலீட்டு திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்கு எந்த தயக்கும் கிடையாது. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பிரதமர் மோடி, மிகப்பெரிய அளவிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்த மாநில அரசை பாராட்டுகிறேன். மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கடமையுடன் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இது பாராட்டுக்குரியது.

நான் முதல்வராக நீண்டகாலம் இருக்கிறேன். ரூ.60 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்ப்பது என்பது மிகப்பெரிய சாதனையாகும். அதற்குக் கடுமையாக உழைத்த முதல்வர் யோகி, அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.

மத்தியில் நாங்கள் வெறும் 4 ஆண்டுகளாக தான் ஆட்சியில் இருக்கிறோம். ஆனால் நாட்டை 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் எப்போதும் கார்பரேட் முதலாளிகளை மூடிய அறைக்குள் சந்தித்து வந்ததுடன், அது குறித்த விவரங்களையும் வெளியிடுவதில்லை. தொழில் அதிபர்களுடன் அவர்கள் இருக்கும் ஒரு படம் கூட உங்களால் காண முடியாது. அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) விமானம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியது யார்? இந்த தொழில் அதிபர்கள் எல்லோரும் அவர்கள் வீட்டில் எப்படி பணிந்து இருந்தார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும்.

அப்படி பலன் பெற்ற அவர்கள், தற்போது கார்பரேட்டுகளை திருடர், கொள்ளைக்காரர் என அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் தொழிலதிபர்களுடன் சேர்ந்து நிற்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. காரணம், நாங்கள் முற்றிலும் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். காந்தியடிகள் கூட பிர்லா குடும்பத்துடன் தங்கியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்போது, தொழில் அதிபர்கள் அருகில் நிற்பதற்கு எந்த பயமும் இல்லை.

விவசாயி, தொழிலாளர், தொழில் அதிபர் என அனைவரும் நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்கின்றனர். அப்படியிருக்க தொழில் அதிபர்களை அவமதிப்பது நல்லதல்ல. அவர்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள். ஆனால் அவர்கள் தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சமாஜ்வாடி கட்சியை விமர்சனம் செய்த பிரதமர் மோடி, சைக்கிள் டயரில் (சைக்கிள் சின்னம்) காற்று ஓரளவுக்குத்தான் நிரப்ப முடியும். அதன் அளவை மீறி காற்று நிரப்பினால், இயக்கத்தையே நிறுத்திவிடும். இம்மாநிலத்தை சேர்ந்த எம்.பி. என்ற முறையில் நான் இங்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் வருவேன். என்னை யாரும் இந்த மாநிலத்துக்கு அடிக்கடி வருகிறார்கள் என்று குறைகூற கூடாது என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com