‘பயங்கரவாதத்திற்கு எதிராக எல்லா நாடுகளும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையை கடைப்பிடிப்பதில்லை’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை ராஜதந்திர கருவியாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
‘பயங்கரவாதத்திற்கு எதிராக எல்லா நாடுகளும் சகிப்புத்தன்மையற்ற கொள்கையை கடைப்பிடிப்பதில்லை’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on: 

புதுடெல்லி,

சர்வதேச இந்து அமைப்பான சின்மயா மிஷனின் 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி யில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பயங்கரவாதத்தையும், அதை ஊக்குவிக்கும் நாடுகளையும் கண்டித்தார். மேலும் அமைதியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், உலகில் எந்த பகுதியில் போர் நடந்தாலும் அது அனைத்துப் பகுதிகளையும் பாதிப்பதாக தெரிவித்தார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

2 மிகப்பெரிய மோதல்கள்

உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசியா பதற்றம் என உலகில் இன்று 2 மிகப்பெரிய மோதல்கள் நடந்து வருகின்றன. உலகளாவிய சமூகங்களும், பொருளாதாரங்களும், இந்த மோதல்களில் பெரிதாக பங்களிக்க முடியாத தொலைதூர மக்களும்தான் உண்மையில் இதற்கான விலையைக் கொடுக்கிறார்கள்.

நாம் தொடர்ந்து கையறு நிலையில் இருக்கும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும் என்ற அறைகூவல் மூலம் இந்தியா உலகளாவிய உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்தியா, அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நோக்கத்துக்காக மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்

பயங்கரவாதம், அமைதிக்கு மற்றொரு கொடிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ராஜதந்திர கருவியாக அதை பயன்படுத்துவதை முற்றிலும் ஏற்க முடியாது. அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லா நாடுகளும் உண்மையான சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை என்பதால் இது தொடர்கிறது.

வரலாறு பல படிப்பினைகளை, பல பாடங்களை கொண்டிருந்தபோதிலும் சிலர் இன்னமும் அரசியல் கணக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே இந்தப் பொது அச்சுறுத்தல் குறித்து உலக நாடுகள் கூர்மையான விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வலுவான உறுதியுடன் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிர்க்க வேண்டும்.”

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com