

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு ஆழ்துளை கிணறுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான வழிகாட்டு நெறிமுறைகளை தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. அனைத்து மாநிலங்களும் ஆழ்துளை கிணறுகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் அந்த உத்தரவை மீறும் வகையில் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்வேறு மரண சம்பவங்கள் நடக்கின்றன.
குறிப்பாக கடந்த 25-ந்தேதி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் சுஜித் வில்சன் அவருடைய தந்தையே உருவாக்கிய ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். தமிழக அரசின் தவறான நடவடிக்கையால் அனுபவம் இல்லாத நபர்களை கொண்டு சிறுவனை மீட்டெடுக்க அனுமதித்த காரணத்தால் சிறுவன் சுஜித் 20 அடி ஆழத்தில் இருந்து 85 அடி ஆழத்துக்கு தள்ளப்பட்டான். இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்தியாவில் இனிமேல் சுப்ரீம் கோர்ட்டு நெறிமுறையை அமல்படுத்தி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.