

லக்னோ,
இந்தியாவில் ஏறக்குறைய 40% நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழக்கத்தைக் காட்டிலும் மிகப் பெரிய தண்ணீர் பிரச்சினை இன்றளவும் உள்ளது.
'நமாமி கங்கா' திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தின் உள்ள முத்ரா கிராமத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, பிரம்மாண்டமான தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டமைப்பு இருந்தாலும், அதிகாரிகளின் சோதனையின் போது வந்த தண்ணீரைத் தவிர, அதன் பிறகு குழாய்களில் தண்ணீர் வரவே இல்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சுமார் 2,000 மக்கள் வசிக்கும் இந்த கிராமம், இன்றும் தண்ணீருக்காக ஒரு சில கை பம்புகளையே நம்பி இருக்கும் சூழல் உள்ளது.
இந்த தண்ணீர் பற்றாக்குறை வெறும் தாகத்தைத் தீர்க்கும் பிரச்சினையாக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு சமூகச் சிக்கலாகவும் உருவெடுத்துள்ளது. கிராமத்தில் திருமண வயதை எட்டிய சுமார் 40 இளைஞர்கள் உள்ளனர். ஆனால், தண்ணீர் வசதி இல்லாத கிராமம் என்பதால், தங்கள் மகள்களை இங்கு திருமணம் செய்து கொடுக்க எந்தப் பெற்றோரும் முன்வருவதில்லை.
எங்கள் கிராமத்திற்கு வந்தால், எங்கள் மகள் தினம் தினம் கால் நெடுக்க தண்ணீர் சுமக்க வேண்டும்?" என்ற கேள்விதான், பெண் பார்க்க வருபவர்களின் முதல் கேள்வியாக உள்ளது. இதனால், பல இளைஞர்களின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. திருமணமே செய்துகொள்ளாமல் இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கிராமத்தில் உள்ள மூன்று கை பம்புகளில் இரண்டில் உப்பு நீர் வருவதால், கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரே ஒரு கை பம்பைத்தான் அனைவரும் நம்பியுள்ளனர். காலை நேரமே தண்ணீருக்கான போராட்டத்தில்தான் தொடங்குகிறது. பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் சூழல் நிலவுகிறது.
திருமணம் போன்ற விசேஷங்கள் நடந்தால், சொந்தகாரர்களுக்கு விலைகொடுத்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வரவழைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கெல்லாம் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல் கட்சிகள், வெற்றி பெற்ற பிறகு கிராமத்தின் பக்கம் எட்டி பார்க்கவே வருவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காகிதத்தில் முத்ரா கிராமம் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமமாக இருக்கலாம், ஆனால் நிஜத்தில் மக்கள் இன்றும் வெயிலில் வாடியபடி தண்ணீர் குடங்களுடன் வரிசையில்காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் ஒன்றும் பிரம்மாண்டமான வசதிகளைக் கேட்கவில்லை, குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் மட்டும்தான் கேட்கிறோம் என அந்த கிராம மக்கள் வாய்விட்டு கண்ணீர் வடித்தப்படி கூறுகின்றனர். இந்த அவல நிலை மாற, அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.