

புதுடெல்லி,
அடையாளம் தெரியாத இறந்த உடல்களை அடையாளம் காண ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்த மத்திய அரசு மற்றும் மற்றும் யுஐடிஏஐக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் அமித் சஹ்னி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் பயோமெட்ரிக், கருவிழி தகவல் அனைவரிடமும் பெறப்படுகிறது. எனவே இதனை எடுக்க ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை சிறந்த நிர்வாகத்துக்காகவும், பல்வேறு சேவை மற்றும் சமூகநல திட்டங்களில் வெளிப்படைத் தன்மையுடன் மானியங்கள் வழங்கவும் உருவாக்கப்பட்டது. ஆதாரில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண பயன்படுத்துவது சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமற்றது. கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் ஆதாரில் உள்ள அடையாளங்களை சட்டத்தில் கூறப்பட்டுள்ள பயன்பாடுகளுக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.