மனைவியுடன் பேசாததை மனரீதியான கொடுமையாக கருத முடியாது - சுப்ரீம் கோர்ட்டு

கணவர் பேசாததால் ஏற்பட்ட மன உளைச்சலே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

கோவையைச் சேர்ந்த ஜெயேஷ் கண்ணா என்பவர் ஓமனில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றது குறித்து தகவல் தெரிவிக்காததால் அதிருப்தியடைந்த ஜெயேஷ் கண்ணா, ஜனவரி 18-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை அவருடன் தொலைபேசியில் பேசுவதை நிறுத்தியதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலே சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு, வரதட்சணை கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை விடுவித்தது. ஆனால், மனைவியுடன் 13 நாட்கள் பேசாமல் இருந்தது மனரீதியான கொடுமையாகும் என்று கருதி, ஜெயேஷ் கண்ணாவை குற்றவாளி என அறிவித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதையடுத்து ஜெயேஷ் கண்ணா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் கூறியதாவது:-

"மனரீதியான கொடுமை என்பது ஒவ்வொரு வழக்கின் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

மனரீதியான கொடுமை இல்லை

ஒருவருக்கு சாதாரணமாகத் தோன்றும் ஒரு நிகழ்வு, மற்றொருவருக்கு மனவேதனையை ஏற்படுத்தக்கூடும். எனவே, அதற்கான ஒரே மாதிரியான அளவுகோல் எதுவும் இருக்க முடியாது. இந்த வழக்கில், 13 நாட்கள் மனைவியுடன் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு உறுதியான ஆதாரங்களால் நிரூபிக்கப்படவில்லை. மேலும், திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், அதன் காரணமாக சில காலம் உரையாடல் இல்லாத நிலை உருவாவதும் இயல்பான விஷயமாகும்.

அதனை மட்டும் மனரீதியான கொடுமையாக கருத முடியாது" என்று தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயேஷ் கண்ணாவுக்கு எதிராக குற்றவாளி என வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com