செகந்திராபாத்தில் கோவில் சிலையை உடைத்த நபர் கைது: விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

தாக்குதலுக்கு உள்ளான கோவிலின் முன்பு சாலையில் கூடாரங்கள் அமைத்து, பூஜை மற்றும் சடங்குகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செகந்திராபாத்தில் கோவில் சிலையை உடைத்த நபர் கைது: விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள துர்கை சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிலையை உடைத்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் சல்மான் சலிம் தாக்கூர் என்பதும், அவர் மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் இந்து கோவில்களில் உள்ள சிலைகளை சேதப்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி ஐதராபாத் காவல்துறை கூறியிருப்பதாவது:-

ஜாகிர் நாயக் போன்ற சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் தாக்கூர். காலப்போக்கில் வன்முறையாளராக மாறியிருக்கிறார். இதுபோன்ற வீடியோக்கள், அவரது மனதில் தீவிரவாத கருத்துக்களை விதைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்து மத வழிபாட்டு நடைமுறைகளுக்கு மையமான சிலை வழிபாட்டின் மீது அவர் ஆழமான வெறுப்பை வளர்க்க வழிவகுத்துள்ளது.

ஆளுமை மேம்பாட்டு பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் ஐதராபாத் வந்திருந்தார் தாக்கூர். செகந்திராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அந்த பயிலரங்கம் நடைபெற்றது. அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வளாகத்தை பயிலரங்கம் நடத்துவதற்கு சட்ட விரோதமாக வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. இதையடுதது, பயிலரங்கை நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்து கோவில் தாக்கப்பட்ட சம்பவம் கும்மரிகுடாவில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான பக்தர்கள் கோவில்முன் திரண்டனர். சாலையில் பூஜை மற்றும் பிற சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக கூடாரங்கள் அமைத்து, தரைவிரிப்புகளையும் விரித்து, அதில் அமர்ந்து பூஜைகளை செய்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இவ்வாறு பூஜை செய்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்பதால் கலைந்துசெல்லுங்கள் என அறிவுறுத்தினர். அதுவும் பாதைகளை அடைத்து மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது தவறு என்று கூறினர். எனினும் பூஜை நடத்துவதில் மக்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக கூடாரங்களை அகற்றி, கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com