ஓய்வு பெற்ற ஊழியர்கள் முக்கியமான தகவல்களை வெளியிட தடை: சட்ட திருத்தம் அமல்

பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் முக்கியமான தகவல்களை வெளியிட தடை விதிக்கும், சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எத்தகைய முக்கியமான தகவல்களையும் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) சட்டம் 1972-ல் கடந்த 2007-ம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய தகவல்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், மேற்படி ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்டத்தில் மேலும் பல பிரிவுகளை சேர்த்து, மத்திய அரசு திருத்த சட்டம் ஒன்றை அமல்படுத்தி உள்ளது. மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) திருத்த விதிகள் 2021 என்ற இந்த சட்டப்படி மேற்படி அமைப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் அமைப்பின் களம் மற்றும் அதன் ஊழியர்கள் குறித்தும் எந்த தகவலையும் வெளியிட முடியாது.

கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்டத்தில், மேற்படி ஊழியர்கள் ஏதாவது தகவல்களை வெளியிட தங்கள் துறைத்தலைவரிடம் ஒப்புதல் பெற்றால் போதும். ஆனால் தற்போதைய சட்டத்தில் தங்கள் அமைப்பின் தலைவரிடமே ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டு உள்ளது.

மேலும் ஓய்வு பெறும் ஊழியர்கள் அனைவரும், எத்தகைய முக்கியமான தகவல்களையும் வெளியிடமாட்டோம் என்ற உறுதி மொழியை தங்கள் அமைப்பு தலைவருக்கு வழங்க வேண்டும். தவறும் ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்கவோ அல்லது திரும்பப்பெறவோ இந்த திருத்தம் வழிவகை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com