

புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் ரபேல் போர் விமான விவகாரத்தில், பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் அவைக்கு தவறான தகவல் அளித்ததாக கூறி, அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி, கே.வி.தாமஸ், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, ராஜீவ் சதாவ் ஆகியோர் இந்த நோட்டீசை கொடுத்துள்ளனர்.
நோட்டீசில், அரசியல் சட்டப்படி, பிரதமரும், அவரது மந்திரிசபையும் நாடாளுமன்றத்துக்கும், அதன் மூலமாக நாட்டு மக்களுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளவர்கள். ஆனால், நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்க கடமைப்பட்ட தகவலை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறைத்தார். இதன்மூலம், நன்றாக தெரிந்தே, வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்தினார். அவரது கூற்றை பிரதமர் மோடியும் ஆதரித்தார். ஆனால், அது கடந்த 18112016, 1932018 ஆகிய தேதிகளில் ராணுவ இணை மந்திரி அளித்த பதிலுக்கு முரணாக இருந்தது. அந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் கூறியது சரியானது அல்ல, உண்மைக்கு புறம்பானது. அவையை தவறாக வழி நடத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே கூறப்பட்டது.
ராணுவ மந்திரியுடன் சேர்ந்து, பிரதமரும் சபையை தவறாக வழி நடத்தி உள்ளார். ஆகவே, இந்த உரிமை மீறல் நோட்டீசை ஏற்றுக்கொண்டு, உரிமைக்குழுவுக்கு அனுப்பி மேல்நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
பரிசீலிக்கப்படும்
இந்நிலையில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் பரிசீலிக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிக்கட்சி உறுப்பினர்கள், தங்களுடைய நோட்டீஸ் தொடர்பாக சபாநாயகரிடம் கேள்வியை எழுப்பினர். அப்போது சுமித்ரா மகாஜன் பதிலளித்து பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான 5 தனித்தனி நோட்டீஸ்களும் பரிசீலிக்கப்படுகிறது என்றார். காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களுடைய நோட்டீஸ் தொடர்பான நடவடிக்கை என்ன என கேள்வியை எழுப்பிய போது பா.ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கொடுக்கப்பட்ட நோட்டீஸ் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு எதிராக 4 நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ள என குறிப்பிட்டு அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.