

பாட்னா,
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் இந்தி படம் தயாராகி உள்ளது. படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் வெளியாகும் நாளன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தை திட்டமிட்டபடி டிசம்பர் 1ந்தேதி வெளியிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் படத்தை திரையிட தடை விதித்துள்ளனர். பஞ்சாப், உத்தரபிரதேச முதல்மந்திரிகளும் எதிர்த்துள்ளனர். பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பத்மாவதி படம் குறித்து தணிக்கை குழு இறுதி முடிவு எடுக்காத நிலையில் இத்தகைய வழக்கு தேவையற்றது என சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. படத்தை பார்க்கும் முன்னரே பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த கருத்தையும் கூற கூடாது என படத்தை எதிர்ப்பவர்களை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து உள்ளது.
இந்நிலையில் பத்மாவதி படத்திற்கு தடை விதிக்கும் மாநிலங்கள் பட்டியலில் பீகாரும் இணைந்து உள்ளது. பத்மாவதி திரைப்படத்தில் வரலாறு சிதைக்கப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டப்படுவதை தயாரிப்பாளர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என நிதிஷ் குமார் கூறிஉள்ளார்.
பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் அனைத்து தரப்பும் அடங்கிய இணக்கமான தீர்வு எட்டப்படும் வரையில் படம் பீகாரில் திரையிடப்படாது, என்றார் நிதிஷ் குமார்.