

புதுடெல்லி,
ஒரு காலத்தில் வங்கிகளில் பணம் எடுக்க வேண்டும் என்றால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது, நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் வகையில், ஆங்காங்கே ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும், வேறு எந்த வங்கி ஏ.டி.எம். மூலமும் பணம் எடுக்க முடியும். இதேபோல், ரேஷன் பொருள் விநியோகத்தையும் எளிதாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விநியோகம்
ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், முறைகேடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை தடுக்கும் வகையில், டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விநியோகத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒருசில மாவட்ட ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு தரப்பில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான கூப்பன், சம்பந்தப்பட்ட நபர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அவர் ரேஷன் கடைக்கு சென்று தனது மொபைல் போனுக்கு வந்த கூப்பனை பயன்படுத்தி பொருட்கள் வாங்க முடியும்.
'அன்னபூர்ணா' இயந்திரம்
இதுதவிர, மக்கள் 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள வசதியாக, ஏ.டி.எம். இயந்திரம்போல், 'அன்னபூர்ணா' என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரேஷன் பொருட்கள், பாக்கெட்டுகளில் வைக்கப்படும். இயந்திரத்தில் கண் கருவிழி, விரல் ரேகை போன்றவற்றை பதிவு செய்து, பொருட்களை எடுத்துக்கொள்ள முடியும். இயந்திரத்தில் இருக்கும் 'கியூ ஆர் கோடு' குறியீட்டை பயன்படுத்தியும் பொருட்கள் வாங்க முடியும். இந்த இயந்திரத்தில் 35 விநாடிகளில் 25 கிலோ பொருட்களை பெற முடியும். இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுகுறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குஜராத்தில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தானியங்கி இயந்திரத்தில் 5 கிலோ பாக்கெட்டில் அரிசி, கோதுமை இருக்கும். அதை டிஜிட்டல் முறையில் பெறலாம். இதனால், தரம், துல்லியமான அளவு, வெளிப்படையான விநியோகம் ஆகியவை உறுதி செய்யப்படும். விரைவில், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 2 அல்லது 3 ஏ.டி.எம். மையங்களில் பொருட்கள் வழங்கும் வசதியை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்குவோர், வாங்காதோர் யார் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். அனைத்து செயல்பாடுகளும், கணினி முறையில் கண்காணிக்கப்படுவதால் முறைகேடுகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.