மேகாலயா மாநில முதல்வராக கன்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார்

மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கன்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார். #ConradSangma
மேகாலயா மாநில முதல்வராக கன்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார்
Published on

ஷில்லாங்,

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலின் போது, 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது.

ஆளும் கட்சியான காங்கிரசுக்கு அதிகபட்சமாக 21 இடங்கள் கிடைத்தன. மறைந்த தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கன்ராட் சங்மா எம்.பி. தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சி மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது.

அதிகபட்சமாக 21 இடங்களை கைப்பற்றி தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்கும் காங்கிரஸ் மேகாலயாவில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பிற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது.

கன்ராட் சங்மா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் கங்கா பிரசாத்தை சந்தித்து, தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எனவே ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறும் உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைக்க கன்ராட் சங்மாவுக்கு கவர்னர் கங்கா பிரசாத் நேற்று இரவு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இன்று பாஜக ஆதரவுடன் மேகாலாயா மாநில முதல் மந்திரியாக தேசிய மக்கள் கட்சித்தலைவர் கன்ராட் சங்மா பதவியேற்றுக்கொண்டார். ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com