என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படம் எடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா சிறை வைப்பு

என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா சிறை வைக்கப்பட்டார். இதனால் விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படம் எடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா சிறை வைப்பு
Published on

விஜயவாடா,

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து லட்சுமிஸ் என்.டி.ஆர். என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 1-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை தாக்கி பேசுவது போல் சில காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்துகொள்வதற்காக இயக்குனர் ராம்கோபால் வர்மா, தயாரிப்பாளர் ராஜேஷ் ரெட்டி ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் அந்த ஓட்டலுக்கு வந்தனர். ஆனால் பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வருவதால் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியாது என ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த விஜயவாடா போலீசார், ராம்கோபால் வர்மாவையும், ராஜேஷ் ரெட்டியையும் வேனில் ஏற்றி விஜயவாடா விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் அடைத்து வைத்தனர். படம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தக்கூடாது என போலீசார் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலைய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இருவரையும் இரவு 7 மணிக்கு விமானம் மூலம் ஐதராபாத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசார் வேண்டுமென்றே பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுமதி மறுத்ததாக ராம்கோபால் வர்மா குற்றம்சாட்டி உள்ளார்.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com