

புதுடெல்லி,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்ததாக சமீபத்தில் பிரச்சினை எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் நிர்வாக நெட்வொர்க்கில் ஒரு கம்ப்யூட்டரில் மால்வேர் என்ற தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், நிர்வாக பகுதியின் செயல்பாடுகள் முடங்கின. நிர்வாக பிரிவு கட்டிடம், அணு உலையில் இருந்து தனியாக உள்ளது. மால்வேர் தொற்று, நிர்வாக பிரிவுடன் நின்று விட்டது. அணு மின் நிலையம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது.
நாட்டில் உள்ள அணு உலைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. முதலில் பாதுகாப்பு, பிறகுதான் உற்பத்தி என்ற மந்திரத்தையே நாம் பின்பற்றி வருகிறோம்.
கூடங்குளம் அணு மின் நிலைய சம்பவத்தை தொடர்ந்து, ஐ.ஐ.டி. டைரக்டர்கள், நிபுணர்கள் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
சைபர் பாதுகாப்பு ஆய்வு செய்யப்படுகிறது. மின்னஞ்சல் சேவை, பரிசோதிக்கப்படுகிறது. இணையதளத்தில் ஊடுருவ முடியாதவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
3 மாதங்களுக்கு ஒருமுறை சைபர் பாதுகாப்பை தணிக்கை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அணுசக்தி இயக்குனரகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆலோசனை குழு, சைபர் பாதுகாப்பு தணிக்கை செய்தது. அந்த குழுவும் சில நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது. அவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.