இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை - மத்திய அரசு தகவல்

தடுப்பூசிகளை 2 தவணையாக செலுத்திக் கொள்ள மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன.
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. புதிய வைரஸ் தொற்று என்பதால், அதில் இருந்து பாதுகாக்க போதுமான மருத்துவ வசதிகளும் ஆரம்பத்தில் இல்லை. இதனையடுத்து அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின.

அதன்படி சில நாடுகள் தடுப்பூசிகளை கொண்டு வந்தாலும், ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி, இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உலகளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் இந்த தடுப்பூசிகளை 2 தவணையாக செலுத்திக் கொள்ள அந்த நேரத்தில் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளும் நடந்தன.

தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது. இருப்பினும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸ் உருமாறி தற்போது பெரும் பாதிப்பை கொடுக்காமல் சாதாரண காய்ச்சல் என்ற நிலைக்கு மட்டுமே மாறியுள்ளதே தவிர, அது முற்றிலும் மறைந்துவிடவில்லை.

அவ்வாறு இந்தியாவில் 2 தவணைகளாக செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அதன்படி, 102 கோடியே 36 லட்சத்து ஆயிரத்து 766 முதல் தவணை தடுப்பூசிகளும், 95 கோடியே 5 லட்சத்து 53 ஆயிரத்து 629 2-வது தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 197 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 395 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் ஆங்காங்கே தென்படத் தொடங்கியுள்ளது. கடந்த 31-ந்தேதி வரையிலான கணக்குப்படி இந்தியாவில் 3 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா பாதிப்பு வீரியம் கொண்டதாக இல்லை என்பதால், அதுபற்றி அச்சம் அடையத்தேவையில்லை என்றும், இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் நோய்த்தொற்றின் அறிகுறியை உணர்ந்தால் டாக்டரை உடனடியாக அணுக வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com