

ராஞ்சி,
ஜார்கண்டில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கீதா குப்தா என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த நிலையில், அவரது உறவினர்கள் அங்கிருந்த நர்சுகள் மற்றும் பயிற்சி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் நர்சுகள் மீது தாக்குதல் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்று காலை 350 நர்சுகள் அவசர சிகிச்சை சேவையை நிறுத்தி விட்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் மருத்துவமனையில் இருந்த 1,400 நோயாளிகளின் நிலை கேள்விக்குறியானது.
இந்நிலையில், பெயர் வெளியிட விருப்பமில்லாத மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, இன்று மதியம்வரை 8 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டனர் என கூறினார்.
அந்த மருத்துவமனையின் இயக்குநர் கே. ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது, முழு விவகாரத்தினையும் கண்காணித்து வருகிறோம். போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூறினார்.
ஆனால் போராட்டத்தினால் நோயாளிகள் மரணம் அடைந்தது பற்றி கேட்டதற்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். மருத்துவர்களின் வருகைக்காக காத்திருந்த சில நோயாளிகளின் உறவினர்கள் கோபம் மற்றும் ஏமாற்றத்தினால் அவசர சிகிச்சை பிரிவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.