சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு; ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு; ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
Published on

48-வது தலைமை நீதிபதி

இந்திய நீதி அமைப்பின் தலைமை மன்றமான சுப்ரீம் கோர்ட்டு கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து (1937-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை பெடரல் கோர்ட்டு என அழைக்கப்பட்டது) நேற்று முன்தினம் வரை 47 தலைமை நீதிபதிகளை கண்டிருக்கிறது. 47-வது தலைமை நீதிபதியான எஸ்.ஏ.போப்டே நேற்று முன்தினம் பதவி ஓய்வு பெற்றார்.இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா அறிவிக்கப்பட்டார்.

பதவி ஏற்பு

இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக விழா நடைபெற்றது. விழாவில் என்.வி.ரமணாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். என்.வி.ரமணா, கடவுள் பெயரால் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்து

கொண்டனர்.

வாழ்க்கை குறிப்பு

புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி பிறந்தார். நீதிபதி கே.சுப்பாராவுக்கு பிறகு (1966-1967) ஆந்திர மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட 2-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது முழுப்பெயர் நுதலபதி வெங்கட ரமணா என்பதாகும். இவர் தனது சட்ட பயிற்சியை ஆந்திராவிலேயே தொடங்கினார். ஆந்திரா மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றியுள்ளார். ஆந்திர மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்து அங்கு செயல் தலைமை நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.பின்னர் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். 1 ஆண்டு 4 மாதங்கள் அதாவது 2022 ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி வரை தலைமை நீதிபதி பதவியில் நீடிப்பார்.இவர் அரசியலமைப்பு, குற்றவியல், சேவைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நதி தாவாக்களில் சட்ட நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மனைவி பெயர் சிவமாலா. புவனா, தனுஜா என 2 மகள்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com