டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கோஷம்: போலீசில் புகார்

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் ஆட்சேபகரமான கோஷங்களை எழுப்பினர்.
புதுடெல்லி,
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஒரு கும்பல் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது. அதன் 6-வது நினைவு தினத்தையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, டெல்லி கலவர சதி வழக்கில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் மறுத்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு எதிராக மாணவர்கள் ஆட்சேபகரமான கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக மாணவர் சங்க தலைவர் அதிதி மிஸ்ரா உள்ளிட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. மேலும், உள்மட்ட விசாரணை குழுவையும் அமைத்துள்ளது.
அதே சமயத்தில், நகர்ப்புற நக்சலைட் மனப்பான்மையை இக்கோஷம் பிரதிபலிப்பதாக மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, பியூஸ் கோயல் மற்றும் டெல்லி பா.ஜனதா மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் ஒரு முறையான விசாரணையை தொடங்கி உள்ளது.
இது தொடர்பான அறிக்கை, கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் ஜேஎன்யு நிர்வாகம் பதிவிட்டதாவது, “இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட், வெளியேற்றம் மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக தடை செய்யப்படுதல் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். பல்கலைக்கழகங்கள் புதுமை மற்றும் புதிய யோசனைகளுக்கான மையங்கள், அவற்றை வெறுப்பின் ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை. ஆனால் எந்தவொரு வன்முறை, சட்டவிரோத நடத்தை அல்லது தேச விரோத நடவடிக்கையும் எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ளப்படாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






