ஆபாச படங்கள்... 5 நட்சத்திர ஓட்டலில் அரங்கேறிய படுகொலை; போலீசாரின் அதிரடி

கவுகாத்தியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் காதல் விவகாரத்தால் கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொலை எப்படி நடைபெற்றது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஆபாச படங்கள்... 5 நட்சத்திர ஓட்டலில் அரங்கேறிய படுகொலை; போலீசாரின் அதிரடி
Published on

கவுகாத்தி,

அசாமின் கவுகாத்தி நகரில் கவுகாத்தி விமான நிலையம் அருகே அஜாரா ஓட்டலில் வழக்கம்போல் ஒருவர் அறையை முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து அவர் நேற்று வெளியே வரவில்லை. இதனால், ஓட்டல் ஊழியர் சென்று பார்த்தபோது, அந்த நபர் அறையின் தரையில் விழுந்து கிடந்துள்ளார். அவருடைய மூக்கில் ரத்தம் வழிந்தபடி காணப்பட்டது.

இதனால், அலறியடித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் அதுபற்றி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் வந்தனர். இதுபற்றிய விசாரணையில் அவர், புனே நகரை சேர்ந்த சந்தீப் குமார் காம்பிளே (வயது 44) என்பது தெரிய வந்தது. கார் டீலராக செயல்பட்டு வந்த அவருக்கு அஞ்சலி ஷா (வயது 25) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதியில் அஞ்சலி பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. ஆனால், பிகாஷ் ஷா (வயது 23) என்பவருடனும் அஞ்சலி தொடர்பில் இருந்துள்ளார். தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என அஞ்சலிக்கு, பிகாஷ் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதில் சிக்கலான விசயம் என்னவென்றால், அஞ்சலி மற்றும் சந்தீப் இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச படங்கள் சந்தீப்பின் மொபைல் போனில் இருந்துள்ளன. இதனால், சந்தீப்பிடம் இருந்து அந்த புகைப்படங்களை பெறுவதற்கான திட்டம் ஒன்றை அஞ்சலி மற்றும் பிகாஷ் ஜோடி தீட்டியுள்ளது.

இதன்படி, முதலில் கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தீப்பை சந்திப்பது என அஞ்சலி திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த இடம் வேண்டாம் என்று, கவுகாத்திக்கு வரும்படி சந்தீப் கூறியுள்ளார்.

அவரே, 5 நட்சத்திர ஓட்டலில் அறையை முன்பதிவு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து அஞ்சலி மற்றும் பிகாஷ் இருவரும் கவுகாத்திக்கு ஒன்றாக சென்றுள்ளனர். ஆனால், கவுகாத்தி சென்ற பின் இருவரும் பிரிந்தனர்.

சந்தீப்புக்கு தெரியாமல் அதே ஓட்டலில், பிகாஷ் தனியாக அறையொன்றை முன்பதிவு செய்துள்ளார். திட்டமிட்டபடி, சந்தீப்பை அஞ்சலி சந்தித்துள்ளார். இருவரும் ஒன்றாக ஓட்டலுக்கு சென்றனர். பிகாஷும் வந்து சேர்ந்துள்ளார்.

இதனை பார்த்ததும் சந்தீப்புக்கு ஆத்திரம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. இருவரும் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில், சந்தீப்புக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்ததும் அந்த ஜோடி தப்பி சென்றுள்ளது. போகும்போது, சந்தீப்பின் 2 மொபைல் போன்களை தூக்கி சென்றுள்ளது.

அதில், அவர்களுடைய ஆபாச படங்கள் இருந்துள்ளன என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி தெரிய வந்து, போலீசார் ஓட்டலுக்கு விரைந்தனர். ஓட்டலின் வருகை பதிவேடு, சி.சி.டி.வி. காட்சி மற்றும் விமான நிலையத்தின் பயணிகள் பட்டியல் ஆகியவற்றை கொண்டு அந்த ஜோடியை தேடி சென்றனர்.

அவர்கள் நேற்றிரவு 9.15 மணிக்கு விமானம் பிடித்து கொல்கத்தாவுக்கு தப்ப இருந்த நேரத்தில், அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த முக்கோண காதலில், சந்தீப் படுகொலை அரங்கேறிய சில மணிநேரங்களில் அதிரடியாக செயல்பட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com