ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது - ராஜ்நாத் சிங்

ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது தொடர்பாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது - ராஜ்நாத் சிங்
Published on

கொச்சி,

இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அவர்களை வெளியேற்ற அவர்களுடைய நகர்வு கண்காணிக்கவும், தனிப்பட்ட தகவல்களை பெறவும் மாநில அரசுக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு முகாம்களில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்திய அரசு கடந்த ஆண்டு நடவடிக்கையை தொடங்கிய போது மியான்மரில் நிலையானது மோசமாகியது. மியான்மர் ராணுவத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கை காரணமாக அவர்கள் வங்காளதேசத்தை நோக்கி வந்தார்கள். மியான்மர் ராணுவத்தால் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மியான்மரிலிருந்து வெளியேறியவர்கள் இந்தியாவிற்கு நுழைந்துவிட முடியாத வண்ணம் எல்லையில் பாதுகாப்பு போடப்பட்டது. இப்போது மீண்டும் ரோஹிங்யாக்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொச்சியில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ரோஹிங்யாக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளார்கள். அவர்கள் தொடர்பாக தகவல்களை சேகரிக்க கேரளா உள்பட எல்லா மாநிலங்களிடமும் கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள். அவர்களில் யாரும் அடைக்கலம் கோரி விண்ணப்பம் செய்யவில்லை. தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இப்பிரச்சனையை அரசியல் கட்சிகள் அரசியலாக எடுக்கவேண்டாம் என கோரிக்கை விடுக்கிறேன். ரோஹிங்யாக்கள் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கிடையாது, அவர்கள் கேரளா உள்பட தென் மாநிலங்களிலும் உள்ளார்கள்.

மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்யாக்களின் நகர்வுகளை கண்காணிக்கவும், அவர்கள் ஆணவங்கள் பெறுவதற்கு உதவி செய்யக்கூடாது, அவை அவர்கள் இந்திய குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய உதவிசெய்யும், என கூறியுள்ளார். மாநிலங்களிடம் இருந்து முழுமையான தகவல்தரவு பெற்றதும் இவ்விவகாரம் தொடர்பாக மியான்மர் அரசிடம் தூதரக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.

சமீபத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், மியான்மர் ரோஹிங்யாக்களை திரும்ப ஏற்றுக்கொள்ள முன்வரும் போது இங்குள்ள சிலர் ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது, என்றார். ரோஹிங்யாக்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அவர்களை வெளியேற்றுவோம் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது.

1951 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகதிகள் தொடர்பான ஐ.நா. சாசனங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை. அதனால் அந்த ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள விதிகள் இந்தியாவுக்குப் பொருந்தாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இப்போது ரோஹிங்யாக்களை வெளியேற்றுவது சர்வதேச விதிகளை மீறுவதாகாது எனவும் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com