ஒடிசா: ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு 22 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

வன்முறையை கை விட்டு விடுவோம், நக்சலைட்டுகளுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுவோம் என்று போலீசாரிடம் உறுதி அளித்து உள்ளனர்.
கட்டாக்,
ஒடிசாவில் மால்கனகிரி பகுதியில் போலீசார் முன்னிலையில் 22 நக்சலைட்டுகள் இன்று சரண் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஏ.கே. 47 துப்பாக்கி, 2 இன்சாஸ் வகை துப்பாக்கிகள், ஒரு எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்பட 9 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு, ஒடிசா டி.ஜி.பி. யோகேஷ் பகதூர் குரானியா முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ஜனநாயக நடைமுறை மீது நம்பிக்கை கொண்டு, சமூகத்தின் இயல்பு வாழ்க்கையில் இணையும் முடிவை தேர்ந்தெடுத்து உள்ள அவர்கள், வன்முறையை கை விட்டு விடுவோம் என்றும், நக்சலைட்டுகளுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து விடுவோம் என்றும் உறுதி அளித்து உள்ளனர் என தெரிவித்தனர்.
இதேபோன்று, 150 வெடிக்க தயாராகவுள்ள தோட்டாக்கள், 20 கிலோ வெடிபொருட்கள், 13 சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், ஜெலாட்டின் குச்சிகள், மாவோயிஸ் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டன. இவர்களுக்கு மொத்தம் ரூ.1.84 கோடி உதவி தொகையாக வழங்கப்பட உள்ளது.






