

புவனேசுவரம்,
கொரோனா வைரஸ் தொற்றுநோய், மனித குலத்துக்கு மாபெரும் சோகமாக அமைந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து, பிற மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்கள் நிலைதான் மிகப்பரிதாபமாக அமைந்து விட்டது. ஊரடங்கால் வேலை பார்க்க முடியாத நிலை ஒரு பக்கம் என்றால், போக்குவரத்து சாதனங்கள் முடக்கத்தால் சொந்த ஊருக்கும் போக முடியாத அவல நிலை மறுபக்கம் என்றாகி விட்டது. பலர் கால்நடையாக பல 100 கி.மீ. தொலைவுக்கு பட்டினியாக நடந்து சென்ற பரிதாப நிகழ்வுகளும் நடந்துள்ளன.
அந்த வகையில், ஒடிசாவில் இருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்து மீன் வியாபாரி ஒருவரிடம் வேலை பார்த்த 38 மீனவர்களின் அனுபவம் நெஞ்சை கசக்கிப்பிழிவதாக அமைந்து இருக்கிறது.
ஊரடங்கால் பசியால் தவித்த அவர்கள் வாடகை படகை அமர்த்திக்கொண்டு 5 நாட்கள் கடல்பயணத்துக்கு பின்னர் ஒடிசா போய்ச்சேர்ந்துள்ளனர். அங்கு அவர்கள் குடும்பத்தினரை கூட சந்திக்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அந்த மீனவர்களில் ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவத்தொடங்கி விட்டது. எங்களுக்கு வேலையும் இல்லை. ஊரடங்கால் ரெயிலும் ஓடவில்லை. பல நாட்கள் பட்டினியாகக் கிடந்தோம்.
அதைத் தொடர்ந்துதான் நாங்கள் எப்படியாவது ஊருக்கு போய்ச்சேர்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தோம்.
20-ந் தேதி ஒரு இரட்டை என்ஜின் கொண்ட ஒரு மர படகை வாடகைக்கு பிடித்தோம். அந்தப் படகில் நாங்கள் ஒடிசாவுக்கு புறப்பட்டோம். பசிக்கு சாப்பாடும், தாகத்துக்கு தண்ணீரும் சரியாக கிடைக்கவில்லை. பாதி நேரம் சாப்பிட்டும், மீதி நேரம் சாப்பிடாமலும் வந்தோம். 5 நாள் சவாலான பயணத்துக்கு பின்னர், 600 கடல் மைல் தொலைவை கடந்து நேற்று (நேற்று முன்தினம்) இங்கு (கஞ்சம், சிகிட்டி பட்டிசோனாப்பூர் கடலோர பகுதி) வந்து சேர்ந்தோம், இங்கு எங்களுக்கு சாப்பாடு தந்து, தமிழ்நாட்டை விட்டு ஒடிசாவுக்கு வந்துள்ளதால் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். குடும்பத்தினரை போய்ப்பார்க்கக்கூட முடியவில்லை. இன்னும் 2 வாரங்கள் நாங்கள் இங்கு கழித்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மீனவர்களுக்கு சிகிட்டி பகுதியில் உள்ள கடலோர காவல் நிலையத்தில் போலீசார் சாப்பாடு தந்து ஆசுவாசப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அனைத்து மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய அவர்களிடம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் விஜய் அம்ருத் குலங்கே தெரிவித்தார்.
இதே போன்று கடந்த வாரம் ஒடிசா மீனவர்கள் 27 பேர் சென்னையில் இருந்து படகில் புறப்பட்டுப்போய் ஆந்திராவில் இச்சாபுரம் அருகே பாதுகாப்பு படையினரிடம் சிக்கி, அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.