ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டம்

இந்திய தேசிய கீதத்தை பாடியவர் ரவீந்திரநாத் தாகூர்.
புவனேஷ்வர்,
இந்திய தேசிய கீதமான ’ஜன கண மன அதிநாயக...’ பாடலை பாடியவர் ரவீந்திரநாத் தாகூர். வங்க மொழி கவிஞரான ரவீந்திரநாத் தாக்கூர் கொல்கத்தாவில் பிறந்தார். இவருக்கு ஆங்கிலேயே ஆட்சிகாலத்தில் ஒடிசாவின் புரி கடற்கரை அருகே நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் வீடு கட்டி ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் காலமான பின்னர் அந்த வீட்டை கல்விக்காக பயன்படுத்த ரவீந்திரநாத் குடும்பத்தினர் ஒடிசா அரசுக்கு கொடுத்தனர். அந்த வீடு கல்லூரி விடுதியாக செயல்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்த வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்தனர். அதன்பின் அந்த வீடு கைவிடப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு புரியை தாக்கிய புயலில் வீடு கடுமையாக சேதமடைந்தது.
இதனிடையே, சேதமடைந்த அந்த வீட்டை இடிக்க புரி நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த சில நாட்களுக்குமுன் நகராட்சி அதிகாரிகள் புல்டோசருடன் வந்து ரவீந்திரநாத் வாழ்ந்த வீட்டின் சுற்றுச்சுவரை இடித்தனர். இந்த சம்பவத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, வீட்டை இடிக்கும் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில், ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா கலாசாரத்துறை மந்திரி சூர்யவன்ஷி சுராஜ் கூறுகையில், புரியில் உள்ள குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் வீட்டை புதுப்பித்து அதை அவரது நினைவு அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளோம்’ என்றார். அருங்காட்சியகமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.






