30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர்; ஒடிசா மந்திரி சர்ச்சை பேச்சு

ஒடிசாவில் 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் என மந்திரி ஒருவர் கூறியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர்; ஒடிசா மந்திரி சர்ச்சை பேச்சு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில் வேளாண் துறை மந்திரியாக இருப்பவர் பிரதீப் மஹரதி. ஒடிசா சட்டசபைக்கு இதுவரை 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் வீடியோ ஒன்றில் 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் என கூறியது வைரலானது.

இதனை தொடர்ந்து மந்திரியின் வீடு முன் பாரதீய ஜனதா மகளிர் அணி தலைவர் பரீடா தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. அவர்களில் சிலர் மந்திரியின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.

இந்நிலையில் இதுபற்றி மந்திரி பிரதீப் கூறும்பொழுது, பெண்கள் புண்படும்படியான எந்தவொரு விசயத்தினையும் நான் பேசியதில்லை. அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்வியே இல்லை என கூறினார்.

எனது அறிக்கையை சிலர் தவறாக அர்த்தம் கொண்டுள்ளனர். சத்யாவதியில் (மந்திரி தொகுதியில் உள்ள பகுதி) முதல் மந்திரியின் கூட்டத்தில் 30 ஆயிரம் பெண்கள் மற்றும் மற்றொரு 30 ஆயிரம் (அவர்களின்) கணவர்கள் என 60 ஆயிரம் பேர் வருவர் என கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பாரதீய ஜனதா மகளிர் அணி தலைவர் பரீடா கூறும்பொழுது, பெண் சமூகம் புண்படும்படி மந்திரி பேசியுள்ளார். இவர் எப்படி இதுபோன்ற மிக கீழ்த்தர மற்றும் பொறுப்பற்ற வகையில் பேசுகிறார் என ஒரு பெண்ணாக உள்ள அவரது மனைவி விளக்க வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com