

புவனேசுவரம்,
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், தனியார் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நோயாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்க முயன்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் குந்தாபாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜோஷ் பரிக் (வயது 35). இவர் கடுமையான ரத்தத் தொற்று பாதிப்பு காரணமாக உதலா துணைப் பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை புவனேஸ்வரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகு கொண்டு செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு சுமார் 8:45 மணியளவில், நோயாளி ஆம்புலன்ஸிற்குள் ஏற்றப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்துவதற்காக ஓட்டுநர் சிலிண்டரின் வால்வைத் திறந்தபோது, எதிர்பாராதவிதமாக வாயு கசிவு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் தீப்பற்றியது.
தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிப்பின் தாக்கத்தால் ஆம்புலன்ஸின் மேல் கூரை தனியாகப் பெயர்ந்து, சுமார் 40 அடி தூரத்தில் போய் விழுந்தது. ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால், உள்ளே இருந்த நோயாளி சுஜோஷ் பரிக் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரைப் பத்திரமாக மீட்கப் போராடிய சரத் பிரதான் மற்றும் மாசி முண்டா ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உதலா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸில் எரிந்த தீயை அணைத்தனர். இச்சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து உதலா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலிண்டர் வெடித்ததற்கான துல்லியமான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.