ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து

ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
ஒடிசா பூரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் வாழ்த்து
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை விழா கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு பக்தர்கள் இன்றி இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் பக்தர்களை அனுமதிப்பது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் இன்றி ரத யாத்திரை திருவிழா நடந்தது.

ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களை கொண்ட சிவப்பு, மஞ்சள் நிற தேராகும். 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிற தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வருவார்கள்.

தேரோடும் ரத்ன வீதியை பொன்னாலான துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி சுத்தம் செய்வது வழக்கம். முதலில் மூத்த சகோதர பலராமரின் தேரும், அதன் பின்னர் தங்கை சுபத்திரை தேவியின் தேரும் நகர்வலம் வரும். இறுதியாக ஜெகந்நாதரின் ரதம் கிளம்பும்.

ஆண்டுதோறும் 45 அடி உயரமும், 35 அடி அகலமும் கொண்ட புதிய ரதங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு பயன்படுத்தப்படும் தேர் மறு ஆண்டு பயன்படுத்தப்படுவதில்லை.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசாவில் உள்ள அனைத்து பக்தர்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவருக்கும், ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை விழாவை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கடவுள் ஜெகந்நாதர் ஆசியால், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வு முழுவதும் மகிழ்ச்சி, வளம் மற்றும் சுகாதாரம் ஆகியவை நிரம்பியிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com