ஒடிசா: லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டதால் குளத்தில் குதித்து தப்ப முயன்ற எஸ்.ஐ... விரட்டிப் பிடித்த அதிகாரிகள்

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்ததால், எஸ்.ஐ. சுஜித்குமார் அருகில் இருந்த குளத்தில் குதித்து தப்ப முயன்றார்.
ஒடிசா: லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டதால் குளத்தில் குதித்து தப்ப முயன்ற எஸ்.ஐ... விரட்டிப் பிடித்த அதிகாரிகள்
Published on: 

புவனேஸ்வர்,

ஒடிசாவில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம்

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் மஹுல்பலி காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் காவல் உதவி ஆய்வாளர்(எஸ்.ஐ.) சுஜித்குமார் மஹந்தா. இவர் வழக்கு ஒன்றை சுமூகமாக முடித்து வைப்பதற்காக ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுஜித்குமாரை பிடிப்பதற்காக சென்றனர். லஞ்ச பணத்தை பெறுவதற்காக எஸ்.ஐ. சுஜித்குமார், சம்பந்தப்பட்ட நபரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வருமாறு கூறியிருந்தார்.

குளத்தில் குதித்த எஸ்.ஐ.

அந்த நபர் அங்கு வந்து சுஜித்குமாரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது, ஏற்கனவே அந்த இடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சுஜித்குமாரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது எஸ்.ஐ. சுஜித்குமார் அருகில் இருந்த குளத்தில் குதித்து தப்ப முயன்றார்.

வழக்கு பதிவு

இதையடுத்து அதிகாரிகளும் குளத்தில் குதித்து சுஜித்குமாரை அதிரடியாக துரத்திப் பிடித்தனர். தொடர்ந்து சுஜித்குமாரிடம் இருந்து லஞ்ச பணம் மீட்கப்பட்டதுடன், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1,55,700 பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், எஸ்.ஐ. சுஜித்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X