தேவேந்திர பட்னாவிசின் இளம்வயது உறவினர் கொரோனா தடுப்பூசி போட்டதால் சர்ச்சை

தேவேந்திர பட்னாவிசின் இளம்வயது உறவினர் கொரோனா தடுப்பூசி போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேவேந்திர பட்னாவிசின் இளம்வயது உறவினர் கொரோனா தடுப்பூசி போட்டதால் சர்ச்சை
Published on

மும்பை,

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மத்திய அரசு சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்து உள்ளது. வரும் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடலாம் என அறிவித்து உள்ளது.

இந்தநிலையில் பா.ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திரபட்னாவிசின் உறவினரான வாலிபர் ஒருவர் 2-வது தவணை தடுப்பூசி போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேவேந்திரபட்னாவிசின் அத்தை பேரனான தன்மே பட்னாவிஸ் நாக்பூரில் உள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி போட முடிந்த நிலையில், 20 வயது மதிக்கதக்க தன்மே பட்னாவிஸ் எப்படி தடுப்பூசி போட்டுக்கொண்டார் என அரசியல் கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தன்மே பட்னாவிஸ் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி விதிகளைமீறி தடுப்பூசி போட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து விளக்கமளித்து தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதாவது:- தன்மே பட்னாவிஸ் எனது தூரத்து உறவினர். எந்த அடிப்படையில் அவர் தடுப்பூசி போட்டார் என்பது எனக்கு தெரியாது. அவர் தடுப்பூசி போட தகுதியிருந்தால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் தகுதியில்லாமல் தடுப்பூசி போட்டு இருந்தால் அது தவறாகும். தகுதியில்லாததால் எனது மகள், மனைவி கூட இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com