துணை ராணுவத்தினர் முழங்கால் போட்ட விவகாரம்; விசாரணை அறிக்கை அளிக்க டி.ஜி.க்கு உத்தரவு

ஒடிசாவில் துணை ராணுவத்தினரை முழங்கால் போட வைத்த விவகாரத்தில் அறிக்கை அளிக்கும்படி டி.ஜி.யிடம் ஒடிசா மனித உரிமைகள் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
துணை ராணுவத்தினர் முழங்கால் போட்ட விவகாரம்; விசாரணை அறிக்கை அளிக்க டி.ஜி.க்கு உத்தரவு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவின் பரிபாடா என்ற பகுதியில் கடந்த ஜூன் 25ந்தேதி ரத யாத்ரா நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 4 துணை ராணுவத்தினர் சீருடை அணியாமல் இருந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் மயூர்பஞ்ச் மாவட்ட எஸ்.பி. அசோக் திரிபாதி பொது மக்கள் முன்னிலையிலேயே முழங்கால் போட சொல்லி கைகளை உயரே தூக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றிய புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. இதனை அடுத்து பொது மக்கள் மற்றும் மாநிலம் முழுவதுமுள்ள துணை ராணுவத்தினர் மத்தியில் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தண்டனை வழங்கிய ரிசர்வ் இன்ஸ்பெக்டர் அசோக் திரிபாதி, அவர்களுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவே தண்டனை வழங்கப்பட்டது என தனது தரப்பு நியாயத்தினை விளக்கியுள்ளார்.

இந்நிலையில், ஒடிசா மனித உரிமைகள் ஆணையத்திற்கு 4 மனுக்கள் அனுப்பப்பட்டன. அதில், பொது மக்கள் முன்னிலையில் முழங்கால் போட சொல்லி தண்டனை வழங்கியது சட்ட விரோதம், மனித தன்மையற்ற செயல் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 21ன் கீழ், வாழ்வது மற்றும் கண்ணியம் ஆகியவற்றிற்கான உரிமையை மீறும் செயல் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த ஆணையம் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி டி.ஜி. மற்றும் மயூர்பஞ்ச் மாவட்ட எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com