ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் இயக்கம் நிறுத்தமா? நிர்வாகம் தரப்பு விளக்கம்

ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படாது என நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் இயக்கம் நிறுத்தமா? நிர்வாகம் தரப்பு விளக்கம்
Published on

இந்தியாவின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாது என்ற நிலையை நோக்கி செல்கிறது.

நிறுவனத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. இருப்பினும் ஏர் இந்தியா எரிபொருள் வாங்கியதற்கான தொகை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த 200 நாட்களாகவே ஏர்இந்தியா எரிபொருள் செலவுக்கான பணத்தை செலுத்தவில்லை. எரிபொருள் செலவு ரூ. 4,500 கோடியையும் திருப்பி செலுத்தவில்லை.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக 90 நாட்கள் வரை தான் கடன் வழங்கும். ஏர் இந்தியாவுக்கு கடன் வழங்கி 200 நாட்கள் தாண்டியும் திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏர்இந்தியா மிகப்பெரிய கடன் பொறுப்புகளை கையாள முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவிற்கு சுமார் 55 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாக தெரிகிறது. ஏர் இந்தியாவிற்கு மாநிலங்களில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் மாதத்திற்கு பின்னர் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத சூழலில் ஏர் இந்தியா உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படாது என நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகானி இதுதொடர்பாக பேசுகையில், ஏர்இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது உண்மையானது. இருப்பினும், விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசுடனும் தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடனில் சிக்கி தவிக்கும் ஏர்இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் அரசு விற்பனை செய்யலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com