இரு மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு அனுமதி- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இந்த புதிய விதிகளால், ஓலா, ஊபர், ரேபிடோ சேவைகளைப் பயன்படுத்துவோர், கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரு மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு அனுமதி- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Published on

மும்பை,

இந்தியாவில் ஓலா, ஊபர் செயலிகள் மூலமாக வாகனங்களை புக் செய்து பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே நாம் செல்லும் இடத்தை இந்த செயலியில் கிளிக் செய்தால், ஆட்டோ, கார் என எதில் போக விருப்பமோ.. அதில் புக் செய்து பயணிக்கலாம். கட்டனத்தையும் ஆன்லைனிலேயே செலுத்த முடியும். இதற்காக குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாடகை கார் டிரைவர்களிடம் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வசூலித்துக்கொள்கின்றன. அது போக பீக் நேரம் என சொல்லப்படும் காலை மற்றும் மாலை வேளைகளில் கட்டணத்தை இந்த நிறுவனங்கள் அதிகரிப்பதையும் காண முடிகிறது. இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய விதி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.

அதாவது, இந்த புதிய விதிகளால், ஓலா, ஊபர், ரேபிடோ சேவைகளைப் பயன்படுத்துவோர், கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை மற்றும் மாலையில், அதிகமானோர் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நேரத்தில், கட்டணத்தை இரு மடங்காக்கி கொள்வது, பயனாளிகளின் இடத்தை அடைய ஓட்டுநர் அதிக தொலைவு வர வேண்டியது இருந்தால், அதற்குக் கூடுதல் கட்டணத்தை பயனாளியே அளிக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன.

புதிய விதிமுறைகள், ஆட்டோ, பைக் டேக்ஸிகளுக்கும் பொருந்தும் என்றும், குறைந்தபட்ச கட்டண திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்தக் கட்டணத்தை 1.5 மடங்கு அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டு 2 மடங்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேவேளையில், சாதாரண நேரங்களில், வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட 50 சதவீதக் கட்டணத்தை குறைத்துக்கொள்ளலாம். பயணத்தை புக் செய்து விட்டு ரத்து செய்யும்போது, ஓட்டுநர் ரத்து செய்தாலும், பயணி ரத்து செய்தாலும் அபராதத் தொகை வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.100 க்குள் இந்த கட்டணம் இருக்க வேண்டும்

3 கிலோ மீட்டர் வரைக்கும் டிரைவர் பயணித்து வந்து, பயணி இருக்கும் இடத்தை அடைந்தால் கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பயணித்து வந்தால் மட்டும் சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்" உள்ளிட்ட அம்சங்கள் புதிய விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பீக் நேரங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கலாம் என்ற விதி பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com