வங்காளதேச பிரதமர் பதவியேற்பு விழா; இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பு

வங்காளதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்க உள்ளார்.
வங்காளதேச பிரதமர் பதவியேற்பு விழா; இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பு
Published on

டெல்லி,

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இதனையடுத்து, வங்காளதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இதையடுத்து, வங்காளதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வங்காளதேச பொது தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

அதில் வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கூட்டணி மொத்தம் 212 இடங்களை கைப்பற்றியது. வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் நாளை மறுதினம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அந்நாட்டின் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி இந்தியா, சீனா உள்பட தெற்காசியாவில் உள்ள நாடுகளின் தலைவர்களுக்கு தாரிக் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாளை மறுதினம் நடைபெற உள்ள வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியா வர உள்ளார். அவர் நாளை மறுதினம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனால், வங்காளதேச பிரதமர் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com