நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பு ஏற்றார் - மோடி, அனைத்துக்கட்சி தலைவர்கள் வாழ்த்து

நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பேற்றார். அவருக்கு பிரதமர் மோடியும், அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பு ஏற்றார் - மோடி, அனைத்துக்கட்சி தலைவர்கள் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் 17-வது மக்களவை அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டத்தொடர் 17-ந்தேதி தொடங்கியது. முதல் இரு நாட்களில் புதிய எம்.பி.க்களுக்கு பா.ஜனதா மூத்த எம்.பி. வீரேந்திர குமார் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

17-வது மக்களவை சபாநாயகர் பதவிக்கு சற்றும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பூண்டி தொகுதி எம்.பி.யான 56 வயது ஓம் பிர்லாவை பாரதீய ஜனதா அறிவித்தது. அவர் நேற்று முன்தினம் மக்களவை செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்தன. அதுமட்டுமின்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் போன்ற கட்சிகளும் தங்களது ஆதரவை அறிவித்தன. இறுதியில் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கூட்டணியும் தனது ஆதரவை தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று மக்களவை கூடியதும், சபாநாயகர் தேர்தலை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் நடத்தினார்.

இந்தப் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அந்த தீர்மானம் குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு பெற்றுள்ளார் என்ற அறிவிப்பை தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் வெளியிட்டார். அனைவரும் கை தட்டி அதை வரவேற்றனர். அத்துடன் தற்காலிக சபாநாயகரின் பணி முடிவுக்கு வந்தது.

உடனே ஓம் பிர்லாவை பிரதமர் மோடி சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச்சென்று அமர வைத்து வாழ்த்தினார்.

அப்போது, பாரதீய ஜனதா, காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் இருக்கை அருகே அணிவகுத்துச்சென்று, ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து கூறினர்.

பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப்பேசியபோது, அவர் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் மட்டுமல்லாது 2011-ம் ஆண்டு குஜராத்தில் நில நடுக்கம் தாக்கியபோதும், 2013-ம் ஆண்டு உத்தரகாண்டில் பெருவெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியபோதும் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினார்.

கோட்டா பூண்டி பகுதியை கல்வி மையமாக ஓம் பிர்லா மாற்றிக்காட்டி இருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் சபையை நடத்திச்செல்வதற்கு அரசு மற்றும் ஆளுங்கட்சியின் சார்பில் தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் குறிப்பிடும்போது, இந்த சபையை நீங்கள் நடத்திச்செல்வதற்கு அரசாங்கத்தின் சார்பிலும், ஆளுங்கட்சி தரப்பிலும் உங்களுக்கு முழு ஆதரவை நான் உறுதிப்படுத்துகிறேன். உங்கள் உத்தரவுதான் மேலோங்கி நிற்கும் என்ற உறுதியையும் அளிக்கிறேன். எங்கள் தரப்பிலிருந்து (ஆளுங்கட்சி) யாராவது வரம்பு மீறி நடந்து கொண்டாலும் நீங்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஓம் பிர்லா அரசியலின் மையப்புள்ளியாக பொதுசேவை இருந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறி தனது வாழ்த்தை நிறைவு செய்தார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர், சபாநாயகர் பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது; பொதுநலன் கருதி பிரச்சினைகள் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர்தான் சபையின் காப்பாளர் என்றும், ஜவகர்லால் நேரு கூறியபடி, நாட்டையும், நாட்டின் சுதந்திரத்தையும் பிரதிபலிப்பவர் சபாநாயகர்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகக்குறைவான மசோதாக்கள்தான் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுவதாக கவலை தெரிவித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்த போக்கு மாற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிஜூ ஜனதாதளம் தலைவர் பினாகி மிஷ்ரா வாழ்த்திப்பேசும்போதும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்தை எதிரொலித்தார். அத்துடன், போட்டியின்றி ஒருமனதாக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டிருப்பது, அவரை அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதையே காட்டுவதாக சுட்டிக்காட்டினார்.

புரட்சிகர சோசலிஸ்டு கட்சி தலைவர் என்.கே.பிரேமசந்திரன் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். செயல்படுகிற எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும் அவர் சொன்னார்.

தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு, சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், அப்னாதளம் தலைவர் அனுபிரியா படேல், லோக்ஜனசக்தியின் சிராக் பஸ்வான், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் பேசினர்.

குடியரசு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பேசியபோது ஒரு கவிதையை கூறியது சபையில் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.

அனைத்துக்கட்சி தலைவர்களின் வாழ்த்துக்கு நன்றி கூறி சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்ட திட்டங்களின்படி சபையின் நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன் என்ற உறுதியை அளிக்கிறேன். சபையில் கட்சிகளின் பலத்தை கருத்தில் கொள்ளாமல், உறுப்பினர்களின் நலன்களை பாதுகாப்பேன்.

பிரதமர் நரேந்திர மோடி தனது அரசை வெளிப்படையானதாக நடத்தி வருகிறார். சபையில் அரசு மிகவும் பொறுப்புள்ளதாகவும், பதில் அளிக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஒவ்வொருவரின் குரலும் கேட்கப்பட வேண்டும். அவர்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். சபையை சுமுகமாக நடத்திச்செல்வதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.

மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் உறுப்பினர்கள் கேள்விகளையும், பிரச்சினைகளையும் எழுப்ப வேண்டும்.

உங்களைப்போன்றுதான் நானும் இந்த சபையில் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் உறுப்பினராக இருந்துள்ளேன். வரிசையின் கடைசியில் நிற்பவர்களின் பிரச்சினைகளை நாம் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்து வந்த பாதை

சபாநாயகர் ஓம் பிர்லா, மாணவப் பருவம் தொடங்கி அரசியல் களத்தில் இருந்து வருகிறார். 2003, 2008, 2013 என தொடர்ந்து 3 முறை ராஜஸ்தான் சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு முதன்முதலாக கோட்டா பூண்டி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு பெற்றார். இந்த தேர்தலில் அதே தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் ராம்நாராயண் மீனாவை 2 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

முதல் முறை எம்.பி.யானபோது மக்களவைக்கு அவரது வருகை சராசரி 86 சதவீதம். 671 கேள்விகளை எழுப்பினார். 163 விவாதங்களில் பங்கேற்றார். 6 தனிநபர் மசோதாக்களையும் சபையில் அறிமுகம் செய்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணியின் மாநில தலைவராக இருந்து, தேசிய துணைத்தலைவராக உயர்ந்தார். எம்.காம். பட்டம் பெற்ற இவர், எரிசக்திக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக, சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கான மனு மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.

பிரதமர் மோடிக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவுக்கும் நெருக்கமானவர். பொது சேவையில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.

ஓம் பிர்லாவுக்கு டாக்டர் அமிதா பிர்லா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com