இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு, பிப்ரவரி முதல் வாரம் உச்சம் தொடும் - ஆய்வு தகவல்

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று, 3-வது அலையைக் கொண்டு வரும், இது பிப்ரவரி 3-ந் தேதி உச்சம் தொடும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுத்தகவல் கூறுகிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு, பிப்ரவரி முதல் வாரம் உச்சம் தொடும் - ஆய்வு தகவல்
Published on

கான்பூர்,

தென் ஆப்பிரிக்காவில் பரவத்தொடங்கிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று, தற்போது உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. கொரோனாவின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று கடந்த 2-ந் தேதி நுழைந்து, 17 மாநிலங்களில் கால்தடம் பதித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று தொடர்பாக உலகமெங்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் காஸ்சியன் மிக்சர் மாடல் என்னும் புள்ளியல் சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வுக்கு இந்தியாவில் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் தரவுகளை பயன்படுத்தி உள்ளனர். அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதன் முக்கிய தகவல், உலகமெங்கும் நிலவுகிற போக்கைத்தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்றின் மூன்றாவது அலை இந்தியாவில் டிசம்பரில் தொடங்கும். பிப்ரவரி தொடக்கத்தில் (3-ந் தேதி) ஒமைக்ரான் உச்சம் தொடும் என்பதுதான்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், எங்கள் ஆரம்ப கண்காணிப்பு தேதியில் இருந்து (ஜனவரி, 30, 2020) 735 நாட்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு உச்சம் அடையும் என கணித்திருக்கறோம் என குறிப்பிட்டனர்.

ஏற்கனவே தேசிய கோவிட்-19 சூப்பர்மாடல் கமிட்டி உறுப்பினர்களும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொற்று நோயின் 3-வது அலை வரும் என கணித்திருந்தனர். இந்த குழுவின் தலைவரான ஐதராபாத் ஐ.ஐ.டி. பேராசிரியர் வித்யாசாகர், இந்தியாவில் தொற்றின் 3-வது அலை வரும், ஆனால் அது இரண்டாவது அலையைவிட லேசான பாதிப்பைத்தான் கொண்டிருக்கும் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com