

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. கேரளா, மராட்டியம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் அனைத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் வரத்தொடங்கி உள்ளது.
இவ்வாறு குறைவான எண்ணிக்கையிலேயே புதிய பாதிப்புகள் அமைவதால் இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழேயே தொடர்ந்து நீடித்து வருகிறது.
இத்தகைய சாதகமான அம்சங்கள் நேற்றும் நீடித்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 15 ஆயிரத்து 590 ஆகும்.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,490 பேரும், மராட்டியத்தில் 3,579 பேரும், மேற்கு வங்காளத்தில் 680 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதாவது மொத்த பாதிப்பில் 77.56 சதவீதம் பேர் வெறும் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
மேற்படி 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 683 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் புதிய பாதிப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் 10 லட்சம் பேரில் வெறும் 87 பேர் மட்டுமே கடந்த 7 நாட்களாக சராசரியாக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இது உலக அளவில் மிகவும் குறைந்த சராசரிகளில் ஒன்று ஆகும்.
குறிப்பாக ரஷியா, ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதைவிட அதிக சராசரியை தற்போதும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 200-க்கு கீழேதான் இருந்தது. அதாவது வெறும் 191 பேர் மட்டுமே மரணமடைந்திருக்கிறார்கள்.
புதிதாக நிகழ்ந்த மரணங்களில் அதிகபட்சமாக மராட்டியர்கள் 70 பேரும், கேரளா, மேற்கு வங்காளத்தில் முறையே 19 மற்றும் 17 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 918 ஆகியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 1.44 சதவீதம் மட்டுமே ஆகும்.
இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் 15,975 பேர் தொற்றில் இருந்து மீண்டிருக்கிறார்கள். இதிலும் அதிகபட்சமாக கேரளாவிலேயே அதிகம் பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். அங்கு 4,337 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் குணமடைந்திருக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து மராட்டியர்கள் 3,309 பேரும், சத்தீஷ்கார்வாசிகள் 970 பேரும் குணமடைந்துள்ளனர். புதிதாக குணமடைந்தவர்களில் 81.15 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடைசியாக குணமடைந்தவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்று மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 62 ஆயிரத்து 738 ஆகும். இது மொத்த பாதிப்பில் 96.52 சதவீதம் என்பது நினைவுகூரத்தக்கது.
நேற்று காலை நிலவரப்படி வெறும் 2 லட்சத்து 13 ஆயிரத்து 27 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். இது முந்தைய நாளைவிட 576 பேர் குறைவாகும்.
இந்தியாவில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலைவில் வெறும் 2.02 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விடுமுறை தினமான நேற்று முன்தினமும் 7 லட்சத்து 30 ஆயிரத்து 96 சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு இதுவரை மேற்கொண்டிருக்கும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 18 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரத்து 40 ஆகும். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.