பத்மாவத் படத்துக்கு எதிராக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு

பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி மத்திய பிரதேசம் ராஜஸ்தான் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளன. #Padmaavat | #SupremeCourt
பத்மாவத் படத்துக்கு எதிராக மத்திய பிரதேசம் ராஜஸ்தான் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு
Published on

புதுடெல்லி,

பிரபல நடிகை தீபிகா படுகோன், நடிகர்கள் ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் பத்மாவதி என்ற பெயரில் படம் வெளியாக இருந்தது. இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் இந்த படத்தை வெளியிடுவதற்கு சில மாநிலங்கள் தடையும் விதித்தன.

எனவே படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், படத்தின் பெயரும் பத்மாவத் என மாற்றப்பட்டது. இந்த படத்துக்கு தணிக்கைக்குழுவினர் சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து வருகிற ஜனவரி 25-ந்தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்த படம் திரையிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்றுகூறி ராஜஸ்தான், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் இந்த படத்துக்கு தடை விதித்தன. இது தொடர்பாக குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் அறிவிப்பும் வெளியிட்டன. இந்த தடையை எதிர்த்து பத்மாவத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, படத்துக்கு 4 மாநில அரசுகள் விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால், ராஜஸ்தான் மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது என கூறி சில வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. இதனால், மேற்கூறிய மாநிலங்களில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில், பத்மாவத் படத்துக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என கூறி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. படத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைய காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. #Padmaavat | #SupremeCourt

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com