23-ந் தேதி மட்டும் காலை 11 மணிக்கு பதிலாக பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது

மக்கள் ஊரடங்கால் ரெயில், விமான சேவையில் மாற்றம் எதிரொலியாக, 23-ந் தேதி மட்டும் காலை 11 மணிக்கு பதிலாக பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.
23-ந் தேதி மட்டும் காலை 11 மணிக்கு பதிலாக பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எம்.பி.க்கள் பலர், மக்கள் ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுவதையொட்டிய பிரச்சினையை எழுப்பினர்.

மக்கள் ஊரடங்கு காரணமாக, ரெயில் சேவை 22-ந் தேதி இரவுவரை ரத்து செய்யப்படுவதாலும், விமான சேவையில் மாற்றம் செய்யப்படுவதாலும், வெளிமாநிலங்களை சேர்ந்த தங்களால் 23-ந் தேதி காலையில் சீக்கிரமாக டெல்லி வந்து சேர முடியாது என்று அவர்கள் கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, 23-ந் தேதி ஒருநாள் மட்டும் காலை 11 மணிக்கு பதிலாக பகல் 2 மணிக்கு மக்களவை கூடும் என்று அறிவித்தார். அன்று கேள்வி நேரம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சபாநாயகர் மேலும் கூறுகையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்குக்கு எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த கட்சிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதுபோல், மாநிலங்களவை பகல் 2 மணிக்கு கூடும் என்று அதன் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இதற்கிடையே, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை தெரிவித்தும், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தும் மாநிலங்களவையில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானம், நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசுகையில், தொற்றுநோய் தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது. ஆனால், 65 வயதை தாண்டிய சபைத்தலைவரும், நிறைய எம்.பி.க்களும் இங்கு வந்துள்ளனர். அப்படியானால், நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை விட நாடாளுமன்றம் மேலானதா? என்று கேட்டார்.

அதற்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், நாடாளுமன்றம் கூடியதால்தான் பட்ஜெட்டை நிறைவேற்ற முடிந்தது. எம்.பி.க்களின் பணியை நாடு அறிய முடிந்தது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com