

புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த அறக்கட்டளை மீது சமீபத்தில் ஒரு புகார் கூறப்பட்டது. அதாவது ராமர் கோவிலுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.18.5 கோடி மதிப்பில் வாங்கியதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.
ராமர் கோவிலுக்காக பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் இந்த ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய இந்த கட்சிகள், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தன.
இந்த புகாரால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி மறைவதற்குள் நேற்று மேலும் ஒரு புகாரை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதாவது ராமர் கோவிலுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அயோத்தியில் 890 மீட்டர் நிலம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய பா.ஜனதா தலைவர் ஒருவர், அதை ரூ.2 கோடிக்கு ராமர் கோவில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார். இதன் மூலம் 79 நாட்களில் 1250 சதவீதம் லாபம் பார்த்துள்ளார்.
ராமபிரான் பெயரில் அயோத்தி பா.ஜனதா தலைவர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில்தான் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கடமை இல்லையா? இந்த பிரச்சினையை சுப்ரீம் கோர்ட்டு அறிந்து கொள்ள வேண்டாமா?
இதில் சுப்ரீம் கோர்ட்டு தனக்கு இருக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். ராமர் கோவில் கட்டுமான பணிக்கான ஒட்டுமொத்த பணப்பரிமாற்றத்தையும் தனது மேற்பார்வையின் கீழ் தணிக்கை செய்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
அதைப்போல ராமர் கோவில் அறக்கட்டளையை அமைத்தவர் பிரதமர் மோடி. அவருக்கும் இதில் உண்மையை கண்டறியும் கடமை இருக்கிறது. எனவே இது குறித்து அவரும் விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
இது ஒழுக்கம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல, அரசியலமைப்பு ரீதியான கேள்வியும் கூட. எனவே இது குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
ராமர் கோவில் கட்டுமானத்திற்காக பகிரங்கமாக நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மோடியும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் முற்றிலும் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.