

புதுடெல்லி,
உத்கால் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதற்கு ரெயில்வே ஊழியர்கள் காரணம் என்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டு உள்ளார்.
ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. விபத்தில் இறந்தவர்கள் 21 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் 15 மீட்டர் அளவிற்கு ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து உள்ளது, ஆனால் உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் டிரைவருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்காததே விபத்துக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டுவிட்டர் பதிவுகளில் வெளியிட்டு உள்ள தகவல்களில், உத்கால் எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சேதமடைந்த தண்டவாளங்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. கவிழ்ந்த 14 பெட்டிகளில் 7 பெட்டிகள் மீட்கப்பட்டு விட்டன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து குறித்து தனிப்பட்ட முறையில் நான் நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன்.
ரெயில்வே வாரியத்தின் செயல்பாட்டில் எந்த மெத்தனத்திற்கும் இடம் கிடையாது. விசாரணையின் முடிவில் விபத்து நடந்ததற்கு மனித தவறுதான் காரணம் என்பது தெரிய வந்தால் அதற்கு பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.