ஓணம் பண்டிகை: 6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு - கேரள அரசு அறிவிப்பு


ஓணம் பண்டிகை: 6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு - கேரள அரசு அறிவிப்பு
x

இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு கேரள அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் 6 லட்சம் குடும்பங்களுக்கு 15 மளிகை பொருட்கள் அடங்கிய ஓணம் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். மேலும் சேம நிலையங்களில் உள்ள 4 உறுப்பினர்களுக்கு ஒரு தொகுப்பு வீதம் இலவசமாக ஓண தொகுப்பு வழங்கப்படும். அதில் ½ லிட்டர் தேங்காய் எண்ணெய், ½ கிலோ சர்க்கரை, ½ கிலோ பாசிப்பருப்பு, சேமியா பாயசம் மிக்ஸ் பாக்கெட், மில்மா நெய் 200 கிராம், முந்திரி பருப்பு, சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, தேயிலை, துவரம் பருப்பு, உப்பு தூள் உள்பட 15 பொருட்கள் அடங்கி இருக்கும்.

இதுதவிர ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும். நீல நிற கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும், வெள்ளை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 15 கிலோ அரிசியும் கிலோவுக்கு 10 ரூபாய் 90 பைசா விலையில் வழங்கப்படும். இதன் மூலம் 53 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.

96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ வீதம் கே-ரைஸ் எனப்படும் கேரள மாநில அரசு வழங்கும் அரிசி கிலோவுக்கு ரூ.25 விலையில் வழங்கப்பட உள்ளது. தற்போது இந்த அரிசி ஒரு கிலோ ரூ.29-க்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மாநிலத்தில் பல இடங்களிலும் ஓண சந்தைகள் திறந்து காய்கறிகள், பழங்கள், நேந்திரங்காய் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.

1 More update

Next Story