வீடுதோறும் அத்தப்பூ கோலம்.. கமகமக்கும் விருந்து.. கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை


தமிழகத்தின் குமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற திருவோணம் பண்டிகையில் மாவேலி மன்னன் நகர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மலையாள மொழி பேசும் மக்களின் கலாச்சார விழாவான ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க இந்த பண்டிகையில் அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்வார்கள். கேரள மன்னன் மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்கும்விதமாக விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் கேரள பெண்கள். கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் இன்று ஓணம் பண்டிகை வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் கேரள பாரம்பரிய உடைகள் அணிந்து, ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமான அத்தப்பூ கோலம் போட்டு, மகாபலி சக்கரவர்த்திக்கு வரவேற்பு அளித்தனர். ஊஞ்சல், வடம் பிடித்து இழுத்தல், உறியடி, பந்து விளையாட்டு, ஓணம் சிறப்பு விருந்து என ஓணம் பண்டிகை களைகட்டி உள்ளது. மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோவில்கள் மற்றும் வீடுகள் பூக்களால் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். இதனால் ஓணம் விழா குமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று குமரி மாவட்டத்தில் ஆலயங்களிலும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இறைவனை வழிபட்டனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அத்தப்பூ கோலம் போட்டும், ஓண சத்யா விருந்து வைத்தும் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு மன்றங்கள், அமைப்புகள், பள்ளி கல்லூரி நிறுவனங்கள் சார்பில் இந்த விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பிரதர்ஸ் கிளப் சார்பில் 40-வது ஓண பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் வேடமடைந்த மாவேலி மன்னனின் (மகாபலி சக்கரவர்த்தி) நகர்வல நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நகர்வலத்தில் தையும், புலிக்களி, சிங்காரி மேளம், செண்டை மேளம், நாதஸ்வரம், மாளதளம் முழங்க பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தபடி ஆண்களும் பெண்களும் நேரியல் உடைகள் அணிந்து ஊர்வலாக வந்தனர். மாவேலி மன்னன் வேடமிட்டவர், வீடு வீடாக சென்று மக்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் மக்களுக்கு பிரசாதம் கொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.

இதுதவிர அந்த பகுதியில் ஓண ஊஞ்சல் போடப்பட்டிருந்தது. இதில் குடும்பத்துடன் மக்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து பிரம்மாண்டமான மதிய ஓண விருந்தும் நடைபெற்றது. ஓண பண்டிகை ஒட்டி மாலையில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. ஓணம் திருநாளை முன்னிட்டு குழித்துறை பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.

1 More update

Next Story